வெள்ளி, 25 மே, 2012

பட்டை தீட்டலாமே! “பயணம்”இதழ் விமர்சனம் இங்கு நிதர்சனம்!

வாழ்க்கைப் பயணத்தின் “அனுபவங்கள்” பாக்களாய்ப் பயணப்பட்டன வானலை வளர்தமிழ்த் தேரில். எல்லாரும் ஒரே திசையினை நோக்கியேப் பயணப்பட்டது போல் தோன்றினாலும் சில அபூர்வமான பயணங்களும் கண்டோம்.

01) காவிரி மைந்தன்:

தேடலே பயணம் என்று பாடலில்
தேடலைக் காட்டிய விதம் சிந்தனைக்கூடல்
பறவைகள் கூட திசையினைத் தீர்மானித்தே
இறக்கைகளை விரிக்கின்றன என்கின்றார்
இங்கு ஓர் அற்புதமான சிந்தனையை
உங்கட்கு நினைவூட்டுகின்றேன்
பறவை வானில் பயணிக்கும் பொழுது
பறவையை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும்;
வானைப் பற்றிய நினைவை நீக்கி விட வேண்டும்
என்று தன் மீதி ஓர் ஈர்ப்பை ஏறபடுத்தும்
பறவையின் பயணம்!


02) மதுக்கூர் சேட்:

குறுகிய அடிகட்குள்
கருவறை முதல்
கல்லறை வரை
பயணப்படுதலைப்
பயன்படுத்திய விதம் அருமை!

03) குறிஞ்சிதாசன்

இரை தேடும் பறவையாய்
இறக்கைக் கட்டிப் பயணித்தது முதல்
நித்திரை பயணம் வரை
முத்திரைச் சொற்களால்
முத்திரைப் பதித்தன இவரின் வரிகள்..

’சாதனையாளர்களின் பயணங்கள்
சாதாரண பயணங்கள் ஆகா”என்று
பட்டியலிட்ட பாங்கு ஆஹா ஆஹா
பட்டி தொட்டியெல்லாம் குறிஞ்சி மலராய் மணக்கும்!

04)
சி.என்.ரவீந்திரன்(மசாஃபி)

தேவையும் தேடலுமாய்
தேரிழுத்தார் பாடலிலே
வள்ளுவர் முதல் கண்ணதாசன் வரை
அள்ளுமழகு தமிழ்ப் பயணம் அடுக்கியுள்ளார்;
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை
நாற்றங்காலாக நற்றமிழில் விதைத்தக் க”விதை”!
மசாஃபி பாட்டில் நன்றாய் கவிநீர் இனித்தது!

05)  அஃப்சல் பெய்க்:

பயணங்கள் சில தருணங்களில்
“பயம்” ஆகும் பயணங்களானதை
திக் திக் திகில் கவிதையாய்
பக் என உணரவைத்தார்
“ஏர் இந்தியா” விமான விபத்தை!
யார் இந்தக் கவிதையை படித்தாலும்
கண்ணிர்தான் பெருகும்
விண்ணில் பயணம்
விபத்தில்லாப் பயணமாக அமைக!

06)
அத்தாவுல்லாஹ்

வார்த்தைகளின் வானம்பாடி
கோர்த்திருக்கும் ஞானம்பாடி!

மெஞ்ஞான ஊற்றாக இவரின் பாடல்
அஞ்ஞானம் அறுக்கும் பயணத் தேடல்!

மனிதனின் தோற்றம் எனும் பயணமே
புனிதனாய் மாற்றும் என்பது நியாயமே!


07)
பல்கீஸ் சாகுல்:

ஒரு கவிஞர் மற்றொரு கவிஞரின் முகம் பார்க்கும் கண்ணாடி என்றொரு வரியை “முகம்” எனும் தலைப்பில் முகநூலில் அடியேன் ஒரு கவிதையில் வைத்தேன்; அதனை உணமைப்படுத்தும் விதமாக அன்புச் சகோதரி பல்கீஸ் சாகுல்  எழுதிய புதுக்கவிதை , “பயணங்கள்” எனும் மரபுப்பாவில் அடியேன் எழுதிய கருத்துக்கள் ஒன்றாக அமைந்திருப்பதன் மூலம் அறிந்தேன்; வியந்தேன்; கவியுள்ளங்கள் என்றும் ஒரே சிந்தனையில் பயணப்படுபவர்கள் தான் என்பதை உலகம் ஒத்துக் கொண்ட உண்மையே! அன்புச் சகோதரி பல்கீஸ் சாகுல் பெண்மையின் மென்மையான குரலில் வாசிப்பதைப் போலவே அவர்களின் கவிதையின் சொற்களும் மென்மையாகவும் எவரையும் புண்படுத்தாமல்; ஆனால் பண்படுத்தும் நல்லுபதேசங்களாகவேக் காண்கிறேன். இவர்கட்கு இறைவன் வழங்கியுள்ள பேராற்றலால் கற்பனை வளங்களும் சொல்நயங்களும் அருவிகளாய்க் கொட்டுகின்றன; இவற்றை வகைப்படுத்தி “யாப்பு” எனும் வரப்புக்குள் இட்டு- இலக்கண வேலி போட்டால் ( கற்பனை+சொல்நயம்+இலக்கணம் சேர்ந்த) ஒரு கவிதைச் சோலை மலரும் என்பது என் கணிப்பு!. அதனாற்றான் அவர்கட்கு யாப்பிலக்கணம் கற்பிக்கலாம் என்று எண்ணுகின்றேன்.தனக்கும் என்னைப்போல் யாப்புக்கவி இயற்ற ஆவல் இருந்தும் அதன் விளக்கம் அறியாமல் இருப்பதாக என்னிடம் சொன்னதும் ,”கல்வியைத் தேடும் அவாவினைக் கண்டேன்”. இதே கருத்தை முன்னர் அன்புச் சகோதரி கவிதாயினி மலிக்காஃபாரூக் அவர்களிடமும் வைத்தேன்; எதிர்பாராதவிதமாக தாயகம் சென்று விட்டார்கள். இந்த அன்புச் சகோதரி மட்டும் இலக்கணம் ஒட்டிய இவர்களின் கற்பனைகள் கலந்த வடிவில் பாக்கள் வனைய முற்பட்டால் இவர்களை வெல்ல முடியாத சிகரத்தை எட்டி விடுவார்கள்; இஃது என் மாணவிக்கு என் ஆசிகளாகும்! “பூ” பற்றிய இவர்களின் கவிதையில் “கசக்கிய பிறகும் மணக்கும் ஒரு தியாகி” என்ற வரிகளைக் கேட்டு அழுதவர்களில் அடியேனும் ஒருவன். எத்துணை அழகான- ஆழமான சொல்லாடல்; இதுதான் கவிதை தேடல்!
“பயணங்கள்” பாடலில் “இறுதிப்பயணத்தின் இரகசிய நாள் தேடிக் காத்திருக்கும் முதுமைப் பயணம்” எனும் வரிகளில் மனதை நெருட வைத்தன; அடியேனும் முதுமை நோக்கிப் பயணிப்பதால் அன்புச் சகோதரியின் அறிவுரையாக ஏற்கிறேன்!

08)
கவிஞர் மு.பஷீர்

விடையறியா வினாக்களாகப்
பயணிக்கும் இவரின் பாடலில்
சிந்தனைக்கு நல்விருந்து கிடைக்கும்!

பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும்
பயணங்களின் பரிமாணங்கள்
பாடல் முழுவதும் பரவிக் கிடக்கும்!

09)
புதுவை கிறிஸ்டோபர்:

நடைபயணம் துவங்கி
பாடைபயணம் வரைக்கும்
வாகன பயணம் துவங்கி
வாழ்க்கை பயணம் வரைக்கும்
மனிதப் பயணங்களை வர்ணிக்கும்
இவரது வரிகளில்
இறைவனும் பயணிக்கின்றான்,
“அருள்மழை”எனும் ஆசி பயணம்
என்ற வரிகள் விவிலியத்தின்பால்
இவர் கொண்ட நேசம்- விசுவாசம்!

10)
காரைக்குடி ஃபாத்திமா ஹமீத்

வண்ணமாய்ப் பாடல் இயற்றும்
கண்ணதாசனின் காரைக்குடி எனும்
பதியில் பிறந்ததால் இவரும் கவிதை
நதியில் நன்றாகவே நீந்துகிறார்!

என் மரபுப்பாவின் முதல் வரியும்
இவரின் புதுக்கவிதையின் முதல்வரியும்
ஒரே எண்ணமுடன் எழுத்துக்களில்
எப்படித்தான் அமைந்தனவோ?

என்பாடல்:

“தந்தையின் விந்தும் கருவறை நோக்கித்
    தனிமையில் முதன்முதற் பயணம்
முந்தவும் பின்னே இறையருள் கொண்டு
    முயற்சியால் வென்றதும் பயணம்”

அன்புச் சகோதரி ஃபாத்திமாவின் பாடல்:

“ஒருகோடி அணுக்களுடன்
உல்லாசமாய் தொடங்கி
உடன்வந்தோரை விட்டுவிட்டு
வெற்றிபெற்றது ஒருகருவின் பயணம்”

வியந்தேன்; இதுதான் கவியுள்ளம் என்று
புரிந்தேன்!

அறிவியல் பயணம்
அருளியல் பயணம்
அரசியல் பயணம்
செய்து சாதித்தோரின் பயணங்கள்
நெய்து காட்டியுள்ளார்
புதுக்கவிதை தறியில்
அற்புதமான சிந்தனைப் பொறியில்!

11)

அதிரை இளையசாகுல்

நான் பிறந்த அதிரை எனும் பதிக்குப் பெருமை சேர்க்கும் இளைய சாகுல் சிந்தனைச் சிற்பி என்று அழைக்கப் பெறும் அளவுக்கு புதுவெள்ளமாய்ப் பொங்கி வழிகின்றது இவரின் புதுக்கவிதை பயணங்கள்!

குரலின் வேகத்துக்கு இவரின் வரிகளா அல்லது இவரின்
வரிகட்கு இவரின் குரலா என்று தீர்ப்புச் சொல்லவியலாத அளவுக்கு வேகம் இவரின் வரிகளும்;குரலும்!

மனிதர்கள் துவங்கி, விலங்கினம் மற்றும் பறவைகளின் பயணங்களில் இவரின் சிந்தனையும் பயணப்பட்டு விட்டதால்
கவிதையும் நீண்டு விட்டதோ?

12)

“கவியன்பன்” கலாம்:

என்னைப்பற்றி நானை எப்படி விமர்சிப்பது?
ஆனாலும்.”பயணங்கள்” கவிதை.
 உருவான கதை
இதன் விதை: மார்க்க ஞானம்

இப்பயணம் என்ற தலைப்பினைக் கேட்ட மாத்திரத்தில் “பூ”த் தலைப்பிலான கவியரங்கம் முடிந்து துபையிலிருந்து என் இருப்பிடம் அபுதபி நோக்கிப் பயணப்பட்ட போழ்து, பேருந்தின் இருக்கையில் அமர்ந்ததும் என் சிந்தையில் தட்டியப் பொறிகள் எழுசீர் விருத்தம் எனும் இலக்கண வர(ம்)ப்புக்குள் இனிதாய்ப் போய் இருக்கையிட்டுக் கொண்டன!

சிந்தனைப் பொறியிற் தட்டிய சீர் மிகு எழுசீர் விருத்தம் அழகிய ஓசை நயத்துடன் அமைந்த விருப்பத்துடன் என் கணிப்பொறியில் இடம்பிடித்தன; தமிழ்த்தேர்க்கு வடம்பிடித்தன; உடனே காவிரியார் அவர்கட்கு அனுப்பினேன்; அவர்களும் அதில் உள்ள வரிகளை வாசித்தார்கள்; நேசித்தார்கள். மேலும், அறிவிப்புச் செய்த உடன் வந்த முதற்கவிதை என்ற பேறும் பெற்றது!

இதன் சிறப்பு
1) என் மரபுப்பாக்களை என் ஆசான்கட்கு அனுப்பி இலக்கணப்பிழை / ஒற்றுப்பிழைகள் திருத்தம் வேண்டி அனுப்புவது என் கடமையான ஒரு பணியாக அடியேன் அமைத்துக் கொண்டதன்படி, இப்பாடலை என் ஆசான்கட்கு அனுப்பினேன். இப்பாடலில் “தொடையில் சாய்ந்து” என்ற வரிகட்குப் பகரமாக “மடியில் சாய்ந்து” என்று மாற்றி அமைத்து அடுத்த அரையடியில் “மகிழ்வுடன்..” என்று தொடங்கினால் “ம” எனும் மோனை ஒன்றி வரும் என்று மட்டும் ஒரு திருத்தம் மட்டுமே செய்து என் ஆசான் அதிரை அஹ்மத் காகா அவர்கள் தந்த தீர்ப்பு:
“ மிகச் சிறந்த கவிதை; அழகிய ஓசை நயம்” இப்படிப்பட்டப் பாராட்டை என் பாடல் பெற்றது எனக்குள் ஓர் அதிர்வு ஏற்பட்டது.
அடுத்த விநாடி காவிரியார் அவர்கள் அலைபேசியில் அழைத்து என்னை இந்தப் பயணங்கள் கவியரங்கின் தலைமைக் கவிஞனாகவும் அக்கவியரங்கில் கவிதை பாடும் 33 கவிஞர்களையும் அழைக்கும் பணியே வானலை வரலாற்றில் புதிய பாணியாக என் மரபுப்பாக்களின் பரணிகளாய் ஒலிக்கட்டும் என்று அன்புக் கட்டளையிட்டார்கள்; அடியேனும் பணிந்தேன்; அல்லாஹ்வும் அருள் பொழிந்தான்!




13)அப்துற் றஊஃப்:

அரசு பணியாளர் அப்துற் றஊஃப் அவர்கள் அபுதபியில் இருந்தாலும் இன்றுவரை நேரில் காணாவிடினும். அவர்க்ளின் ஆக்கங்கள் நாடோறும் என் கணினியின் கதவினைத் தட்டுகின்றன; எட்டுகின்றன!

ஆராய்ச்சியாளர்களின் பயணங்களில் இவரின் பயணப்பாட்டுப் பயணப்பட்டு நம்மை வரலாறு, புவியியல், அறிவியல் பாடங்கள் படித்த காலத்திற்குப் பயணிக்க வைத்தது!

இறுதி வரிகளில் இறைவனை நாடும் பயணமே இறுதிப் பயணமாய் அமைக என்ற வரிகள் “ஈமான்” எனும் நம்பிக்கைக்கு ஆதாரம்!


14)
குத்புதீன் ஐபக்:

அரசியலுக்குப் பொருத்தமான இவரின் அரசியல் பற்றிய ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் இவரின் பேச்சுக்களில் அடிக்கடிக் காணலாம்; ஆன்மீகம் இவருக்கு ஞான ஒளி; அதனாற்றான் வார்த்தைகள் கூட வானவெளி; ஆம். பரந்து விரிந்த பதவுரைகள்; பற்பல அறவுரைகள்!

பயணங்கள் பாட்டுக்கு இவரின் பாடுபொருளாக பண்பின் சிகரம் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் மார்க்கப் பயணம் குறித்த நிகழ்வுகளில், குறிப்பாக தாயிஃப் நகரத்து மக்களிடம் இந்த தாஹா நபி(ஸல்) அவர்கள் பட்ட தொல்லைகளைக் கண்ணீர் வரவழிய கவிதையாக்கியுள்ளார்!

15)
நர்கிஸ் ஜியா:

ஆசிரியையாகப் பணியாற்றும் இவர்களின் ஆற்றல் கவிதை உலகுக்குக் கிட்டிய அற்புதமான வரம்; அதனாற்றான் இவர்களின் வார்த்தைகளில் தரம்! அதுவும் உள்ளத்தில் இடம்பெறும் நிரந்தரம்!! உணர்வுகட்கு உண்மை ஊட்டும் உரம்!!

வாழக்கை பயணத்தை வரிசைப் படுத்தும் இவரின் வசீகர வார்த்தைகளின் வசமாகிவிட்ட இப்பாடலின் இறுதி வரிகள் நின்று, கவனித்து யோசிக்க வைக்கும்.

16)
ஜெயா பழனி:

வாழ்க்கையே ஒரு தேடல் எனும் பயணம் தான் என்பதை வார்த்தைகளால் கோர்த்திருக்கும் விதம் , அற்புதம்

ஒப்பீடுகளும், உவமைகளும் எப்படித்தான் இவரின் இந்தப் பயணப்பாட்டில் பயணப்பட்டு நம்மைச் சிந்தனைப் பயணத்திற்குச் சிறகடித்துப் பறக்க வைக்கின்றன!

17)
தஞ்சாவூரான்:

துவக்கக் காலத்தில் தூய மரபின் வழிநின்று யாப்புக் கடலில் கரைகண்ட இவரோ இன்று புதுநதியில் புதுவெள்ளமாய்ப் பொங்கும் அலைகட்குள் நீந்தி வருகின்றார்!

குறுஞ்செய்தி போல் உள்ள
குறும்பா கூறும் உண்மை
குறும்பாக எண்ண முடியாத அளவுக்கு
அரும்பாக அமைந்த வரிகள்:

“அயல்நாட்டுப் பயணம்:”

“அந்த கையசைப்பின் உள்ளர்த்தம்
கணவனுக்குத்தான் புரியவில்லை
கடவுளே உனக்குமா?”

கண்ணிரை வரவழைக்கும் எதார்த்தம்

ஒவ்வொரு முறையும் விடுப்புக் கழிந்து விமானம் ஏறி மீண்டும் அயல்நாடு வர பயண்க்கும் தருணம் விமானநிலையத்தில் வீசிவரும் இந்த கையசைப்புக்குள் இத்துணை ஆழமான- அழவைக்கும் அழகிய வரிகள் உள்ளபடியே உள்ளர்த்தம் ஓர் உள்ளத்தின் நெருடல்;வருடல்.

18)
ஆனிஷா பானு:

பயணத்திற்கிடையில் “கணினி”யும் பயணப்பட்டிருக்கின்றது இந்தக் கன்னித்தமிழில் கவிதையில்!

இத்தனைச் சிறிய வயதில் எத்துணை ஆழமான உணர்வுகள்!

தாயும் தந்தையும் தமிழின்பால் கொண்ட தாழாத அன்பால்
தானும் தமிழ்ப்பால் நிறையும் தமிழ்ப்பாத் தர முடியும் என்று
நிரூபித்த நிதர்சனம் கண்டு வியந்தேன்!

இறுதி வரிகள் இதயத்தைத் தொட்டன:

உதவும் கரங்களாய் கணினியை உவமையாக்கி நம்மை உவகைப் படுத்திய உள்ளமே உதவி தேடும் பாணி குழந்தையின் கெஞ்சல்; கணினிக்கு அனுப்பிய அஞ்சல்!

19)
ஜியாவுத்தீன்

பதிப்பிக்கும் பணியால் முத்தாய்ப்பான முத்திரை பதிக்கும் இவரின் பயணக்கவிதையும் ஒரு முத்திரையை முத்தாய்ப்பாகப் பதிப்பித்திருக்கின்றது: ஆம், “முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர்” என்பதே இவரின் பணக்கவிதை போடும் விதை!

முன்னோர்கள் பயணித்த பாதை முட்பாதைகள் அல்ல; மலர்ப்பாதைகள்; அவைகளை மனம் ஏறக மறுத்தாலும், மறந்தாலும் அஃதே உண்மை!

பயணிக்கும் பாதைகளைப் பழுது பார்க்கச் சொல்லும் இவரின் வரிகளால், இவர் மிகவும் முன்னேற்பாடுள்ள முற்போக்குவாதியாகக் கணிக்கின்றேன்; வாழ்க! வளர்க!!




”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
என் வலைப்பூ  கவிதைச்சோலை:  http://www.kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
அலை பேசி: 00971-50-8351499 / 056-7822844










--

புதன், 23 மே, 2012

கறுப்பும் வெள்ளையும்:


கறுப்பும் வெள்ளையும்:
=====================

கருவறை இருட்டெனும் கறுப்பு;
பயணிக்கும் உயிரணுவோ வெள்ளை!
இருட்டும் வெள்ளையும் கலந்து
பிறப்பது குழந்தை எனும் கவிதை!

கரும்பலகையில்
வெள்ளைக் கட்டியால்
எழுதினாற்றானே
பழுதின்றிப் பாடம் கற்கலாம்!

கருமையையும் வெண்மையையும்
பிரித்துக் காட்டும் வைகறைப்
பொழுதில் எனக்கு ஓர் ஈர்ப்பு!

இருட்டு அறியாமையை
வெளிச்ச அறிவு வென்ற பின்னரும்
அறியாமையும் அறிவும் கலந்து
ஐயமும் தெளிவும்
ஐக்கியமாய் இருப்பதும் கண்கூடு!

கல்லறையெனும் இருட்டறைக்கு
அமல்கள் எனும் வெளிச்சம்
கொண்டு சேர்த்த பின்னரும்
மீண்டும் எழுப்பும் வரை
பயமெனும் இருளும்
நம்பிக்கை எனும் வெளிச்சமும்
கூடவே நிற்கும்!





”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
என் வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
அலை பேசி: 00971-50-8351499 / 056-7822844

வெள்ளி, 18 மே, 2012

சென்ற வாரம் துபையில் என் தலைமையில் நடந்த கவியரங்கம்/ தினமலர் செய்தியில்..

அன்பு நெஞ்சங்களே கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள்; உங்கள் நண்பன் “கவியன்பன்” கலாமின் கவியரங்கம் பற்றிய செய்தி “தினமலர்” வெளியிட்டக் குறிப்புகள் காணலாம்


http://www.dinamalar.com/nri/details.asp?id=6614&lang=ta


http://www.dinamalar.com/nri/photodetails.asp?id=6614&lang=ta

http://www.mudukulathur.com/?p=11236

http://www.facebook.com/media/set/?set=a.3899987177289.172615.1207444085&type=3&l=b04d6ece13





http://adiraixpress.blogspot.com/2012/05/blog-post_17.html
33 கவிஞர்கட்கு வாழ்த்துப்பா- யாத்தளித்தோன்:”கவியன்பன்” கலாம்


kalam kader <kalamkader2@gmail.com> Mon, May 14, 2012 at 10:13 AM
To: Kalaam Kathir <kalaamkathir7@gmail.com>
01)காவிரிமைந்தன்:
தேனடைக் கூடும் தெவிட்டா வளர்தமிழ்
வானலைக் கூட்டத்தின் வானிலாச் சந்திரன்
அன்பினைச் சொல்லும் அழகு தமிழ்கண்டு
மாண்பினை வாழ்த்தும் மனம்

தமிழ்த்தேரை இழுக்க வடம்தந்தாய்- எங்கள்
    தளிர்நடைக் கவிக்கு இடம்தந்தாய்
அமிழ்தாய் ஒழுகும் காவிரியே – உன்றன்
    அழகுதமிழ் மலரும் பூவிரிய

ஒன்றாய் இணக்கும் தீரன் – நீ
    ஒற்றுமை கயிற்றின் வீரன்
நன்றாய் வாழ வாழ்த்தும் – நீ
    நட்டுவை பயணப் பாட்டும்


தலைமைக் கவியாய் அழைத்து- எனக்குத்
     தந்தாய் அன்பினைக் குழைத்து
நிலைமை யுணர்ந்து வந்தேன் – இதனை
    நித்தம் நன்றியாய்த் தந்தேன்


02)நிவேதிதா:
நாட்டியத்தில்  நீயொரு  நாயகி  யென்பதுபோல்
பாட்டியற்றும் நீயொரு  பாரதி – கேட்டதொரு
பெண்ணினத்தின் நல்ல புதுமைப்பெண்; ஈண்டுவந்து
கண்ணியமாய்ப் பாட்டில் கலக்கு.

பூவைத் தலையிலே பொத்தித்தான் வைக்கும்நீ
பூவைத் தலைப்பிலே பூக்கத்தான் வைத்துக்
கனிவாய் நடத்தும் கவியரங்கம் கண்டேன்
இனியுமுன் பாடல் இயம்பு.

நயனங்கள் அன்றுதான்  நாட்டியம் கண்டேன்
பயணங்கள் இன்றுதான் பாட்டிலே காண்போம்
சிரித்த முகமே சிறப்பாய் அமைய
விரைந்து வருக விழைந்து

03)அதிரை இளையசாகுல்:
குதிரை குளம்பொலியாய்க் கம்பீ ரமாய்த்தான்
அதிரை இளைஞா அதிரவைப்பாய் உன்றன்
பயணத்தைப் பாட்டால் புரியவைப்பாய்; நாங்கள்
நயமுடன் கேட்க நவில்.

கவிதைத் தொகுப்பைக் கனிவுடன் ஈன்று
புவியில் பெரும்புகழ் பூத்திட நானும்
பிறந்த பதிக்குப் பெருமையைச் சேர்த்தாய்
சிறந்த பயணத்தைச் செப்பு.

பெண்ணினத்தைக் காக்கும் பெருமைதான் உன்னிடத்தில்
கண்ணிய பாக்கள் கனிவுடன் கூறுதலை
எண்ணிநான் பார்த்தேன்; இனிதாய் அமையட்டும்
பண்ணியவுன் பாடலைப் பாடு


04)குறிஞ்சிதாசன்
புரட்சிக் கவிஞர் மறுபிறவி
    புயலோ வென்றே நினைத்திடுவோம்
மிரட்டிக் காட்டும் குரலிவர்க்கு
    மிஞ்ச வியலாத் திறமையொளிர்த்
திரட்சி யுண்டு கவிதையிலே
    திராட்சைப் பழமாய் இனிப்பதிலே
வறட்சி யுடனே காத்திருப்போம்
     வருவார் தீர்க்கக் குறிஞ்சியவர்!
அலற வைப்பார் கவிதையிலே
    அசத்தும் குறிஞ்சி மலரினைத்தான்
மலர வைக்கும் பதியினிலே
    மலர்ந்த தாசன் கதிரவனாய்ப்
புலர வைப்பார் புரட்சிகளைப்
    புரிய வைப்பார் புதுக்கவியில்
பலரின் வாழ்த்து மழைகளிலே
   பயணம் செய்வார் பணிவுடனே



05)சந்திரசேகரர்;

அய்யன் வள்ளுவன் அமுத வாக்கை
நெய்யெனச் சுவைக்க நித்தம் தந்த
மூத்த பாவலர் முதுபெறும் அறிஞர்
வார்த்தைச் சித்தர் வாலிப முறுக்குச்
சொல்லில் எம்மைச் சொக்க வைக்கும்
கல்வி கற்றநற் கவிஞர்; பட்டி
மன்றப் பேச்சில் மன்னர்; பாட்டு
மன்றம் வாரீர் நன்றாய்ச் (சந்திர) சேகரே!

வானலைத் தமிழ்த்தேர் வான்புகழ்ப் பெறவுன்
தேனலைத் தமிழால் தொண்டு செய்தாய்
நானெனும் பெருமை நானு முன்னில்
ஏனோ யின்றும் எங்கும் காணேன்
கானம் பாடும் வானம் பாடி
ஞானம் கூடும் ஞாயிறாய்ப் புலர்ந்து
மானம் காக்கும் மாண்புடைத் தமிழா
பானம் போலுன் பாடலைத் தருகவே!


06)நர்கீஸ்:
முக்காடு போட்டுள்ள முஸ்லிம் பெண்ணே
    முக்காடு மூளைக்கு இல்லை தானே
எக்காளம் பேசுகின்றோர் தடைகள் மீறி
    எதிர்நீச்சல் போடுகின்ற பயணம் கூறி
எக்காலம் போற்றும் பாடல் தாநீ
    எங்கட்குத் தங்கையாக மன்றம் வாநீ
அக்காவாம் மலிக்காவும் நின்ற மேடை
   அலங்கரிக்க நர்கீஸை அழைப்பேன் நானே!


பெண்ணாய்நீ பிறந்தாளும் அறிவில் கூர்மைப்
       பெரிதாய்நான் கண்டுகொண்டு வியந்து போனேன்
கண்ணாய்நீ போற்றிவரும் பண்பை பூவின்
       கவிதையிலே புரிந்துகொண்டு நயந்து போனேன்
மண்ணைப்போல் பொறுமையையுன் பாட்டும் சொல்லும்
        மார்க்கத்தைப் பேணுகின்றப் பாங்கைச் சொல்லும்
பண்ணாய்நீ பயணித்த வாழ்க்கை கீதம்
         பாடலாகப் பாடத்தான் விரைவாய் நீயே


07)தஞ்சாவூரான்:

நெற்களஞ்சி யப்பெயரைக் கொண்டவராம் என்றும்
     நெஞ்சத்தில் தூய்மையுடன் வாழ்பவராம் யாப்புச்
சொற்களஞ்சி யமிவர்பா வென்பேனே; ஈழச்
    சோகத்தை வார்த்தைகளால் வடித்தவராம்; இவரோ
அற்புதமாய்ப் பாடல்கள் யாத்திட்டும் தன்னை
    அடக்கத்தில் அடக்கித்தான் வைத்துவிட்ட பண்பால்
பற்பலவாய் நட்புகளும் கூடித்தான் வருமே
  ஃபாரூக்கே தஞ்சாவூர்ப் பாடலைத்தான் தரவே!

வெள்ளுடையில் தூய்மையையும் வாக்கினிலே என்றும்
      வாய்மையையும் கடைபிடிக்கும் போக்கினிலே உன்றன்
உள்ளத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உன்பால்
      உன்னதமாம் நட்பினைத்தான் விழைகின்றோம்; தீமை
வெள்ளத்தில் அடித்துவரும் களைகளையும் பாட்டின்
      வேகத்தில் பயணித்துக் காட்டிடுவாய் ஈண்டு
பள்ளத்தில் வாழ்கின்ற வறியோரின் வாழ்வியலைப் பாடு
     பயணிப்போம் பாட்டென்னும் படகிலுன்னோ டுதானே!



08)குத்புதீன்:

பேசும்கலை உன்னோடுதான் பேரம்விடக் கண்டேன்
பாசம்வளர் பண்பில்நிலை பெற்றும்பணி வைத்தான்
வீசும்மலர்க் காற்றின்மணம் வீசும்குணம் கண்டேன்
காசும்பணம் நாடும்மனம் காலம்தனில் உன்னை

ஆன்மீகமும் ஆட்சித்துறை(யும்) அல்வாவென நாட
மேன்மேலுமே மக்கள்விரும் பும்தன்மையில் வாழ
தேன்சொட்டுமே பேச்சில்கனி கொட்டும்தனி பாணி
நான்மட்டுமா நாடேயுனை நாடும்குது பேநீ

காட்டும்வழி வாழ்க்கைநெறி போற்றும்படிக் கேட்டும்
சுட்டும்விழி பார்வைவழித் தீண்டும்படி ஆட்டும்
பாட்டில்கனி சொட்டத்தனி மெட்டில்வரும் பாட்டும்
கேட்டுத்தலை ஆட்டும்முறை தாலாட்டினைப் போல





09)ஜியாவுதீன்:

பதிப்பகம் நீயிலை; படிக்க நூலிலை
மதிப்போம் உழைப்பை; மதிப்பாய் அழைப்பை

ஜியாவெனும் நண்பர் ஜில்லெனும் அன்பர்
வியாபா(ரம்) இல்லா வியாபிக்(கும்) பாசம்

பயணம் உன்றன் பதிப்பை நாடும்
நயமுடன் பாட நலமுடன் நாடு

ஒக்கத் துணையை  உவந்து மகிழ்ந்திவர்  பேசுவதால்-பெரும்
துக்கம்  பெருகும்  துயரும் விலகிடும்  நிலையது -இவர்

மிக்கப் பெருகும் மகிழ்ச்சிக் கடலில் மிதப்பதெலாம்-அதைத்
தக்கச்  சுவைத்திவர் பாவில் நனைத்தே நகைப்பதுவும்- தமிழ்த்

திக்கும் குலுங்கத் தமிழ்த்தேர்ப் பற்றிச் செல்லுவதும்- வாழ்வின்
பக்கம் நிரம்பப் பதிக்கும் புத்தகம் சொல்லுவதே


10)கீழை ராசா

கிழக்குக் கரையில் கிளர்ந்த வுதயம்
பழகும் விதத்தில் பவுணர்மிச் சந்திரன்
கீழையின் ராசாவே காற்றென வீசுமுன்
பேழைப் பயணத்தைப் பேசு.

ஒற்றைப் பதம்பூ உணர்வினை நீயுமே
கற்றுத் தரும்விதம் கண்டேன் கவிதையில்
பற்றிப் பிடித்தேன் பதவுரைப் போலவே
சற்றும் தயங்காமல் சாற்று.

கண்டேன் முகநூலில் கண்ணுக் கினியவராய்க்
கொண்டேன் அறிமுகம் கொஞ்சும் கவிமுகம்
பாட்டில் நகைச்சுவை; பண்பில் அதேசுவை
கேட்டிட நெஞ்சேநீ கெஞ்சு

11)அதாவுல்லாஹ்

புத்தம் புதிய உறவாய் மலர்ந்த புதுக்கவியே
நித்த மெனக்கு மலரும் மடலில் நினைப்பவரே
சத்தா னவுன்றன் பயண விருந்தைச் சமைத்திடவே
அத்தா வெனவு முனைநான் அழைக்கும் அதாவுலாவே


வருவாய் எனநான் விரும்பி யழைக்க வரும்கவியே
தருவாய் உனதரும் பாக்களை வெல்லும் தனிச்சுவையாய்
கருவாய் அமைப்பாய் பயணம் நடத்தும் கதைகளையே
தருவாய் நினைத்து நிழல்பெற பாக்கள் தரத்துடனே


தோரண வாசலும் உன்னிடம் பாடலால் தோற்றிடுமே
காரணம் கேட்போர் இனியிவர்ப் பாடலைக் கேட்டிடுவீர்
வாரணம் ஆயிரம் போலவே வார்த்தையும் வாய்த்திடுமே
ஊரணி நீராய் புதுக்கவிச் சொற்களாய் ஊறிடுமே

  
12)அப்துர்ரகூஃப்  :

தியாகமுடன் பயணத்தைப் பாட வாநீ
    திறமையுடன் கவிதைப்பூத் தூவ வாநீ
நியாயமுடன் வினாக்களையும் தொட வாநீ
    நிலைநிறுத்தும் விடைகளையும் சொல்ல வாநீ
மயானமும்தான் பயணமென்றுக் கூற வாநீ
    மகிழ்வான வாழ்க்கையும்தான் விளக்கம் தாநீ
வியாபாரம் பயணமென்று சொல்ல வாநீ
    வித்தைகளைக் கற்பதுவும் பயணம் தானே!

அழகுதமிழ் சுவைத்தேனே உன்றன் பாவில்
     அரசுபணி செய்கின்ற எம்நண் பாவே
பழகுமுறை அன்பிலுனை காதல் கொண்டே

   பார்க்கநாடி வந்துள்ளேன் கவிகற் கண்டே
உழைப்பதுவும் பயணம்தான் சொல்வாய் நன்றே
    உரைகல்லாய் உரைத்திடுவாய் பாவில் இன்றே
தழைத்துவரும் சொற்களிலே கவிதை யாத்தாய்
     தனிச்சுவையாம் கவிதைக்கு எங்கள் வாழ்த்தே!







13)கந்தநாதன்:

இந்த நாதன் தமிழ்த்தேரின்
    இன்ப நாதம் பழந்தமிழின்
சிந்துப் பாவில் சிறந்தவராம்
    சிந்தும் புதுமைக் கவியிலெலாம்
காந்தி என்னும் மகாமனிதர்
    காட்டும் வழியைப் படைப்பவராம்
கந்த நாதன் வருகவென்று
   கனிவாய் நானும் அழைத்திடவே

அனுச யாவின் துணையுடனே
     அழகு தமிழை வளர்ப்பதற்கு
அனுச ரணையும் கிடைத்ததுவே
    அன்பால் எல்லார் மனத்திலுமே
அணுவ ணுவாக நுழைந்தவரே
    அழைப்பை ஏற்க விழைந்திடுக
கணுவின் கரும்பாய் இனித்திடவே
    கவிதை யாத்துக் கலக்கிடுக!


14)ஜெயாபழனி:

சூரிய கணவர் இயற்றிய பாவின்
     செங்கதிர் நிலவொளி போல
வீரிய உணர்வால் இவரையும் ஈர்க்க
   விரைவுடன் எழுந்தன பாடல்
நேரிய வழிகள் கூறிடும் பாக்கள்
    நிரம்பவும் வழிந்திடத் தமிழ்ப்பாத்
தேரிலே வடத்தைப் பிடித்திட வந்தார்
   தேறிய புலமையைக் கொண்டு

நயமுடன் எழுதும் உனதரும் பாவில்
     நாங்களும் நனைந்திட வேண்டும்
பயணமாய்ச் சென்ற பாதையை நீயும்
    பக்குவ அனுபவம் கூறு
துயரமோ மகிழ்வோ எடுத்திடும் கருவில்
    துணிவுடன் பாடவே எழுக
பயமிலா வாழ்க்கை நதியினில் செல்வோம்
    பரிசலாய் பாடலும் துணையே


15)ஃபாத்திமா ஹமீது:

அரபும் தமிழும் அழகுற வாய்த்து
மரபும் புதிதும் மணக்கும் வரிகள்
முழுதாய்க் கடலிலே மூழ்கி எடுத்துப்
பழுதிலாப் பாடலைப் பாடு.

வண்ணமாகப் பாட்டில் வளர்தமிழ் ஊட்டிய
கண்ணதாசன் ஊரில் கருவானப் பெண்மணியே
இன்னுமேன் நிற்கின்றாய் ஈண்டு விரைந்துவா
பண்ணுதமிழ்ப் போற்றியே பாடு

பாசிறக்க நீயே பறந்து வருகவென
ஆசிரியை உன்னை அழைப்பதில் மட்டில்
மகிழ்ச்சி அடைகின்றேன் மங்கையர் உன்னால்
புகழ்ச்சி அடையும் பொழுது


16)பல்கீஸ்:

பாவை நீயும் பூவினை மகிழ்ந்துப்
பூவைப் போல பொத்திய மணமாய்
மென்மை கொண்டு மேவிய கவியின்
தன்மை கண்டு தண்மை கொண்டேன்
நன்மை கூறும் நற்பா ஈண்டு
இம்மை மறுமை இன்புற வேண்டும்
உண்மை கூறும் உன்றன் பாவால்
பெண்மையும் புகழினைப் புலமையால் பெறுமே

சென்னையில் பிறந்து உன்னையே தமிழின்
பண்ணையாய் வளர்த்து பண்ணும் பாவில்
விண்ணை எட்டும் வெற்றிக் கிட்டும்
மண்ணை விஞ்சும் மாசிலா பொறுமை
கண்ணாய்க் காக்கும் கற்பின் புர்கா
கண்ணியம் மகிழ்ந்து கண்மணி கவியால்
புண்ணியம் விளங்கிடும் பயணம் பாடுவாய்


17)அபூமைமுனா:

மைமுனா என்றும் மகிழ்ந்திடும் அத்தாவே
கைமுன்னே எங்களின் கைகோர்த்த அத்தாவின்
நண்பரே ஈண்டுவந்து நற்கவி பாடவே
வெண்பா அழைப்பு விருந்து

அன்பில் குழைத்த அழகுதமிழ் உன்றன்சீர்
பண்பில் தெரியும் பழக்கம் புரியும்
புகழும் விதத்தில் புதுமை கவிதை
நிகழ்வை நடத்த நினை.

தேனலை பாய்கின்றத் தேமதுர ஓசையில்
வானலை மோதும் வளர்தமிழ்த் தேரை
வடம்பிடிக்க நீயும் வருகை தவறா
இடம்பிடித்த உண்மை இயம்பு.

  
   18)குத்தாலம் அஷ்ரஃப்:

பருத்த உடலுடன் பக்குவமாய்த் தானே
கருத்துப் பறிமாற்றம் காணலாம் என்றும்
வருத்தப் படாமல் வசீகரம் காட்டும்
மருத்துவம் கண்டேன் மகிழ்ந்து

புயலெனத் தோற்றத்தில் பூவினை பாடல்
வயலெனத் தோட்டத்தில் வைத்தது கண்டு
உணர்வுகள் மென்மை உணரவே வைத்தார்
மணமகன் போல மலர்ந்து.

குத்தாலம் அஷ்ரஃப் குதூகல மத்தாப்பு
சத்தான நட்பு சகோதர தித்திப்பு
முத்தானப் பாடலுக்கு முத்தாய்ப்பு உன்பதிப்பு
வித்தாகத் தூவு விரைந்து



19)மதுக்கூர் சேட்:


மதிகூறின் உண்மையாக இருக்கு மென்று
    மண்டையிலே இறங்குகின்ற வண்ணம் தானே
மதுக்கூரின் சேட்டேநீ பயணம் கூறி
         மதுரகவி பாடலையும் பாட வாநீ
கதைகூறும் செய்திகளைத் தமிழ்த்தேர் ஏறி
       கவிதைகளை மலர்களாகத் தூவ வாநீ
நதிகூறும் ஆற்றொழுக்கு நடையில் பாட
        நண்பரையும் அழைக்கின்றேன் வருக வென்றே

பக்கத்துப் பதியிலுள்ள உன்னை நானும்
       பார்க்காமல் இருந்துவிட்ட பாவி யானேன்
வெட்கித்தான் தலைகுனிந்து வுணர்ந்து கொண்டேன்
       வானலையின் வளர்தமிழின் தேரில் கண்டேன்
இக்கணமும் அழகுமுகம் நேரில் கண்டேன்
      இன்றுமுதல் அன்பாலே இணைந்து கொண்டேன்
பக்கத்தில் வந்துநீயும் பயணம் பாட
      பாசமுடன் அழைத்தேனே நேசம் கூட


20)சசிக்குமார்:

மதிசிறந்த கவிஞரிவர் மனையாள் மற்றும்
          மகனும்தான் தமிழ்ப்புலமைப் பெற்ற பேறு
அதிசிறந்த கவிதைகளாய் இவரின் பாக்கள்
        அதிகமாகத் தெரிவுசெய்வார் கவிதை நோக்கர்
நதிபிறக்கும் சலசலப்பு இவரின் ஓசை
      நானுந்தான் இவரையுமே வெல்ல ஆசை
விதிதிறக்க வழியுமில்லை; அதனால் போட்டி
      வீசிவரும் வெற்றிகளை இவரின் காட்டில்

சசிக்குமாரே என்றாலே சிங்கம் கூட
     சற்றுத்தான் தயங்கிவிடும் பக்கம் போக
விசித்திரமோ ஒன்றுமில்லை இவரின் சிங்க
    வீறுநடை சிங்கத்தைத் தோற்கச் செய்யும்
கசிந்துருகிக் கண்ணீரைக் கொட்டச் செய்யும்
      கனிவான பட்டிமன்றத் தீர்ப்பே சொல்லும்
நசிந்துவரும் வறியோரின் வாழ்க்கைப் பற்றி
     நளினமாக வடிப்பதுவே இவரின் வெற்றி


21)ரவீந்திரன்:

இசையுடன் கவிதையும் இணைந்தே நேசமாம்
திசைகள் எட்டும் தீஞ்சுவை கவிதை யாத்திடும்
திறனைப் பெற்றத்  தீரராம் ரவிந்திரன் புதியவர்
பறவை போலவே பறந்து வந்து
வானலைத் தமிழ்த்தேர் வாழ்த்தும் பாடல்
கானமாய் ஒலித்திட கனிந்திடும் இசையைச்
சேர்த்திடத் துடிக்கும் சீர்மிகு கவிஞர்
பார்த்திடத் துடித்தேன் பாடவா இனிதே

22)பா.விமல்ராஜ்:

கீழ்க்கரையின் சூரியனாய்ப் புதுமை நேசி
      கிளர்ந்தெழுமாம் புதுக்கவிதை கதிரை வீசி
ஆழ்கடலில் முத்தெடுக்கும் அழகுப் பாவில்
       அற்புதமாய் வித்தெடுக்கும் வித்தைப் பூவில்
வாழவிடும் நறுமணமாய் வீசும் போது
      வாழ்த்திடவே வந்துள்ள நேசக்  காது
தோழமையை நாடுகின்றேன் உன்றன் பாவால்
    தோள்கொடுக்கத் தமிழ்த்தேரில் ஏறி வாவா
23)ஜெயராமன் ஆனந்தி:

துணையாள் பெயரைத் துணையாய் அமைத்து
இணையாய் இனிதே இவர்களும் வாழ்வதை
ஒப்பமிடும் நற்பழக்கம் ஒன்றினைக் கொண்டுநாம்
ஒப்பிடுவோம் காதல் உயர்ந்து.

பறந்து வருகின்றப் பாக்களைப் போல
பறந்து வருவாரே பர்துபை நோக்கியே
ஈருருளை வாகனத்தில் இன்பத் தமிழ்த்தேரில்
தாருமுன்றன் பாடல் தொகுத்து.


24)ஆதிபழனி:

கொம்புத்தேன் சுவையினிலே பாடற் பாடி
       கொண்டுவந்துத் தருவாரே ஜெயாவின் ஜோடி
தாம்பத்யம் சங்கீதம் ஆன தாலே
       தம்பதியோ சங்கீத மழையைத் தூவ
மாண்புத்தான் பெறுகின்றார் புதிய பாவின்
      மலர்த்தொகுப்புப் பதிப்பிக்கும் எண்ணம் மேவ
காம்புத்தான் பூவையுமே தாங்கும் என்பார்
        கணவரிவர் துணையாளைத் தாங்கி நிற்பார்

  

25)நாஞ்சிலான்:

செய்யும் தொழிலெழிலால்  சீர்பெற்று வாழுகின்ற
செய்யுள் படைக்கின்ற செந்தமிழ் ஆசானை
மெய்யால் அடியேனும் மெய்சிலிர்க்கக் கண்டேனே
பெய்யும் தமிழ்மழைப் பார்த்து

இலக்கியக் காட்சி இவரின் தமிழால்
கலக்கிய மாட்சியாம்; காதலின் சாட்சி
வரவேண்டும் எங்களின் வானலை மன்றம்
தரவேண்டும் பாக்கள் தழைத்து


26)ஷர்புதீன்:

முத்துநகர்  ரத்தினமே முத்தமிழின் வித்தகமே
நித்தமுன்றன் ஓசையால் நீடுதுயில் நீங்கிடப்
பாடிவரும் வானொலியும் பந்தலிடும் புன்னகையும்
தேடிவரும் வானைலைத் தேர்.

பொட்டி லடித்ததுபோற் புத்துயி ரூட்டுகின்றக்
கட்டுரை யாலுன்னைக் காதலிக்கும் பைந்தமிழ்
விட்டுவிட்டுச் செல்லாமல் விஞ்சுமுன் ஆக்கத்தைத்
தேட்டமிட்டு நோக்குமித் தேர்.


27)அபுல்ஹசன்:

எழிலுக்குத் தந்தையெனும் அழகு பேராம்
      எங்களன்பு அபுல்ஹசனார் என்றும் வாராய்
தொழிலுக்குள் உனைநீயும் புகுத்திக் கொண்டுத்
      தொடந்துநீயும் வளர்தமிழின் தேரில் காணோம்
விழலுக்குப் போகின்ற நீராய்ப் போகா
        விதைக்கின்ற உனதருமைக் கருத்து யாவும்
உழவுக்கு நீரைப்போல் எழுத்தும் எங்கள்
       உணர்வுக்கு உயிரூட்டும் வாராய் அன்பே!


28)மு.செய்யது ஹூசைன்:

அதிகாலை நேரத்தில் அன்பைத் தேடி
      அதிவிரைவாய் வந்திடுவாய் கவிதைப் பாடி
மதிநாவால் எல்லாரும் மதிக்கும் பேச்சு
      மார்க்கம்தான் உனதுயிரின் உணர்வு மாச்சு
மதினாவாழ் மன்னர்தான் நபியின் மீது
      மங்காத காதலென்று கவியும் ஓதும்
நிதிநாடும் உலகினிலே நீதான் இங்கு
      நேசத்தை மட்டும்தான் நாடும் பாங்கு


29)புதுவை ரமணி:

புதுமைக் கவிஞர் புதுவைக் கவிஞர்
முதுமைத் தமிழிலே முத்திரைப் போன்ற
பதிவினைக் காட்டுமிவர்  பக்குவம் பெற்ற
அதிசயம் காட்டும் அறிவு

அறிவியலார்  ஆனார்; அதிகம் எழுதார்
செறிவானக் கட்டுரைகள் செய்வார் தறிபோல
நெய்திடுவார் செந்தமிழின் நேர்த்தியுடை பூணுதற்குத்
தைத்திடும் ஆக்கம் தரம்

30)கிளியனூர் இஸ்மத்:

மெஞ்ஞானச் சூரியன்; மென்மை குணத்தாலே
அஞ்ஞானம் நீக்கும் அகமிய ஆற்றலால்
எஞ்ஞான்றும் வாப்பாவின் இன்னாசிப் பெற்றவர்ப்
பஞ்சான மெல்லுள்ளம் பார்.

வாரவாரம் ஆக்கம்  வராமலிவர் பாராட்டு
ஆரவாரம் இல்லாமல் ஆட்சி நடாத்தும்
பாங்கினைக் கண்டுப் பலமுறை எண்ணினால்
ஓங்குமிவர் அன்பினை ஓதும்

31) ச. கவர்னர்:

ஆளுநர் பேரிலிவர் ஆளுவார் பாவரசை
மீளுங்கள் இன்பத்தை மீட்டும் கவிபாடக்
கேளுங்கள் பாவிசைக் கேடில் விழுச்செல்வம்
தோளுடன் தோளாய்த் துளிர்த்து

மனுவின்றி ஆளும் மனதின் கவர்னர்
மனுதர்மம் பேசும் மகாகவி தானோ
இனியிவரால் செம்மொழி எட்டும் இலக்கைக்
கனியுமிவர் பாவில் கலந்து

32) ராஜாகமால்:

இராசா வெனும்கமால் எம்மையும் அன்பால்
தராசா  கவேஎடைத் தட்டுபோல் வைத்து
நிறுத்திடும் பண்பினால் நீதரே என்போம்
மறுத்திடா நட்புடன் மாண்பு.

பூரணம் தானுன் பெயரின் பொருளாகும்
காரணம் நீயும் கவியின் கருவாகும்
தோரணம் கூவிடும் தோகை இசையாக
வாரணம் ஆயிரம் வாழ்த்து

  
33) ஜீனத் கமால்:

புதுக்கவிதை ஊற்றெடுக்கும் மனத்தின் கேணி
        புல்லரிக்கும் வார்த்தைகள் ஞானத் தேனீ
எதுக்கவிதை என்றெல்லாம் கேட்கும் பாணி
        எங்கட்கு அறிவிக்கப் பயணம் வாநீ
மதுக்குடமே என்றாலும் போதை ஊட்டும்
        மயக்கமெலாம் வாராத பாதை காட்டும்
அதுக்கவிதை என்றெமக்குச் சொல்லத் தானே
        அழைக்கின்றேன் அன்புடனே உன்னை நானே

 
-

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
என் வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
அலை பேசி: 00971-50-8351499 / 056-7822844



--